நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, அமமுக, மநீம என ஐந்துமுனை போட்டியை சந்தித்தது. அதில் திமுக தனிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேலும், அதிமுக எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகினர். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். அப்போது அவர் வெளியிட்டிருந்த அறிக்கையும், அதனைத் தொடர்ந்து இங்கு ஜனநாயகம் இல்லை என அவர் அளித்த பேட்டியும் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
மநீம தலைவர் கமல்ஹாசன், அதனைக் கண்டித்து 'துரோகி' என அறிக்கை வெளியிட்டிருந்தார். இது மக்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் இடையிலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மநீம கட்சியின் இரண்டாம் தலைமையிடமாக செயல்பட்டுவந்த அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் இல்லத்திலிருந்து கட்சி கொடி, கமல் படம் ஆகியவை அகற்றப்பட்டு கட்சி அலுவலகமும் காலி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அக்கட்சியின் கோவை தென்கிழக்கு மா.செ. சுப்பிரமணியன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட சதீஷ்குமார் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.