திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஐ. பெரியசாமிக்கு அவரது மகள் இந்திரா நேற்று (04.04.2021) இறுதிக் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள குட்டத்து ஆவாரம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்திரா கலந்துகொண்டார். அவருக்குப் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள சவேரியார் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு பிரச்சாரத்தில் பேசிய இந்திரா, “கடந்த 32 வருடங்களாக உங்களுடன், உங்களின் செல்ல பிள்ளையாக இருந்து வரும் எனது தந்தையார் ஐ.பி.ஆர் இன்றுவரை தொகுதி மக்களுக்கு ஒரு கடுகளவுகூட துரோகம் நினைத்ததில்லை. ஆனால், பாஜக, பாமக, மற்றும் நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், அவர் மீது அவதூறு பரப்பும் வண்ணம் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி குட்டத்து ஆவாரம்பட்டி மக்கள் ஒரு துளி அளவுகூட நம்பவில்லை என்பது எனக்குத் தெரியும்.
கடந்த பத்து வருடங்களாக திமுக ஆட்சியில் இல்லாதபோதும்கூட தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அனைத்து கிராம மக்களுக்கும் வழங்கி, நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகளை அமைத்துக்கொடுத்து, குடிதண்ணீருக்குப் போர்வெல் போட்டுக்கொடுத்தார். அப்படிப்பட்ட எனது தந்தை ஐ.பி.ஆர் உங்ளுக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து நிறுத்தியிருப்பாரா? இதை நீங்கள் மனதார யோசிக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டை என் தந்தை மேல் சுமத்தி அரசியல் செய்ய பார்த்தனர். அது எடுபடவில்லை என்பது உண்மையாகிவிட்டது.
மே 2க்கு பிறகு தமிழகத்தில் அமைய உள்ள மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், பெண்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ், கரோனா நிவாரண நிதி, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, மாதம்தோறும் குடும்பச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைக்கப்போகிறது. குட்டத்து ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முதல் தொடர்ந்து நடைபெறும். அதுபோல் இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்; உங்களோடு உங்கள் சகோதரனாக, உங்கள் தந்தையாக, உங்களுக்கு நல்லது மட்டும் செய்து வருகிறார் எனது தந்தை. அதை நீங்கள் மனதில் நினைத்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும்; உங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும்” என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் செல்வி ஆரோக்கியமேரி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுமதி, திருப்பதி, மாவட்டப் பிரதிநிதி இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.