மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட இதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லாது என்றும், பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கல் வருமோ? என்கிற வாதப்பிரதிவாதங்கள் மூத்த வழக்கறிஞர்களிடம் எதிரொலிக்கச் செய்கின்றன.
சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மராத்தா சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2018இல் கொண்டு வந்தது மஹாராஷ்ட்ரா அரசு. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு 68 சதவீதமாக உயர்ந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டின. வழக்குகளை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுதான், மேற்கண்ட தீர்ப்பினை வழங்கியது.
இந்தச் சூழலில், மீண்டும் இந்த விவகாரம் பேசு பொருளாகிவருகிறது. இதுகுறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சனிடம் நாம் பேசியபோது, “மாநில அளவிலான இடஒதுக்கீடு மற்றும் எந்தெந்த சமூகத்தினரைப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கலாம் என்கிற அதிகாரம் மாநில அரசுகளுக்குத்தான் இருந்தது. இந்த நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தது மத்திய அரசு. இது, அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 102வது சட்டத் திருத்தம். அதன்படி, 338 பி, 342 ஏ ஆகிய பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டன.
இதில், 342 ஏ என்கிற பிரிவு தேசிய அளவிலும் மாநில அளவிலும் எந்தெந்த சமூகங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிற அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், நாடாளுமன்றத்துக்கும்தான் உண்டு என்று சொல்கிறது. இந்தச் சட்டத்திருத்தத்திற்கு திமுக, தனது கடும் எதிர்ப்பினை நாடாளுமன்றத்தில் காட்டியது. அதேபோல பல கட்சிகளும் எதிர்த்தன. அப்போது இதற்குப் பதிலளித்த சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் யாரை சேர்க்கலாம் என்கிற அதிகாரம் மாநில அரசுகளிடமே இருக்கும் என பதிலளித்தார். மேலும், இந்தச் சட்டத்திருத்த மசோதாவை ஆய்வுசெய்த கமிட்டியும் இதே கருத்தை வலியுறுத்தியது.
இது மட்டுமல்லாமல், மராத்தா வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு சார்பிலும், இந்தச் சட்டத்திருத்தத்தால் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்த விளக்கத்தை 5 நீதிபதிகளில் 2 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். 3 நீதிபதிகள் ஏற்கவில்லை. அந்த 3 நீதிபதிகளும், 342 ஏ பிரிவில் குறிப்பிட்டுள்ள வாக்கியங்களின்படி, மத்திய அரசுக்கே அதிகாரம் உண்டு என்று தெரிவித்தனர். இதனால், எந்த சமூகத்தினரையும் புதிதாக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எந்த ஒரு மாநில அரசும் சேர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது உண்மை.
அதனால், உச்ச நீதிமன்றத்தின் ‘மராத்தா தீர்ப்பு’ பொருளாதார ஒதுக்கீடுகளுக்கு ஒலிக்கும் சாவுமணி. இடஒதுக்கீடு, அதன் சதவீதங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்கும் நிலையில், பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் 2018ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று மிக அழுத்தமாக கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி.