கர்நாடக சட்டசபை இன்று காலை கூடி, எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் போபையா எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டசபையில் ஆட்சி மாற்றம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு. பல்வேறு ட்விஸ்டுகளுக்கு மத்தியில் நடக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், யாருக்கும் வாக்களிக்காமல், அல்லது எதிரணிக்கு வாக்களித்தல் போன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ், ம.த.ஜ. எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டால் அது பா.ஜ.க.வுக்கு சார்பாகவே முடிவடையும். ஆனால், அப்படி மாற்றி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். அதேபோல், கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில், இதைத் தடுப்பதற்காக காங்கிரஸ் விப் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இதன்படி, சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்துகொண்டு, எடியூரப்பாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களான பிரதாப் கவுடா பாட்டீல் மற்றும் ஆனந்த் சிங் ஆகியோர் இன்னமும் சட்டசபைக்கு வராத நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.