Skip to main content

களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி; மத்தியப் பிரதேச காங்கிரசார் உற்சாகம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

congress priyanka gandhi public meeting and rally at madhya pradesh

 

கடந்த மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கர்நாடகத் தேர்தல் முடிவானது காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

 

மேலும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுத்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தி இருந்தது.

 

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜபல்பூரில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மத்தியப் பிரதேசத்திற்கு பிரியங்கா காந்தியை வரவேற்கும் விதமாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக பிரியங்கா காந்தி குவாரி காட்டில் நர்மதா பூஜை செய்தார்.

 

காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசுகையில், "பாஜகவினர் இங்கு வந்து அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. இரட்டை எஞ்சின், மூன்றடுக்கு எஞ்சின் அரசாங்கம் என்று பேசுகிறார்கள். இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இதையேதான் சொன்னார்கள். ஆனால் இரட்டை இயந்திர அரசு பற்றி பேசுவதை விட்டுவிட்டு வேலையைத் தொடங்க வேண்டும் என்பதை மக்கள் தேர்தலில் சுட்டிக் காட்டினார்கள்.

 

எங்கள் கட்சி என்ன வாக்குறுதிகளை அளித்ததோ அவற்றை எல்லாம் சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நிறைவேற்றியுள்ளோம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது ஏராளமான  வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன" எனப் பேசினார். பிரியங்கா காந்தியின் இந்த பேரணி மத்தியப் பிரதேச காங்கிரசார் தரப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்