
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பழையபடி அக்கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்கவுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி, 2026ஆம் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது.
அண்மையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததை தொடர்ந்து அதற்கடுத்த நகர்வாக தமிழகம் வந்திருந்த அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணியை அறிவித்திருந்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட தீவிர பணிகளில் அதிமுக இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் என தொடர் பணியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது.
நேற்று (02-05-25) நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில், பொது எதிரியான திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளை திரட்டும் அதிமுக திட்டத்திற்கும்; அதிமுகவின் மெகா கூட்டணியின் தொடக்கமாக பாஜக உடன் வெற்றி கூட்டணி அமைத்தற்கும் ஆதரவு அளித்து எடப்பாடி பழனிசாமியை பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, இக்கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் இன்று (03-05-25) சென்னையில் தமிழ்நாடு பா.ஜ.க மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஒருநாள் பயணமாக சென்னை வந்துள்ள ஜெ.பி.நட்டா, இந்த கூட்டத்தில் பங்கேற்று தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, அதிமுக - பா.ஜ.க கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பா.ஜ.க கூட்டணி உறுதியான நிலையில், இன்று பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.