தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு தர எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.யுமான விஷ்ணூபிரசாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (13/03/2021) காலை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையிலான கட்சியினரும், அதே அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட் தரக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினரும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால், சத்தியமூர்த்தி பவனில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, "காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி, தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.
எனது தலைவர் ராகுல் காந்தி பணம்தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி. கிடையாது. இந்தத் தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண் முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜோதிமணி எம்.பி.யின் இத்தகைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட எந்த தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில், எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையைக் கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோதச் செயல் அல்லவா?
வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாகக் கருத்துகளைப் பரப்பி நமது தலைவர்களை நாமே களங்கப்படுத்தலாமா? 2014 மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணி, வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா?
கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாகக் கூறுவது ஒரு அரசியல் மோசடி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியைக் களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.