புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த படியாக வந்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகள் பெற்றார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 7,171 வாக்குகள் அதிகம் பெற்றார். காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், எம்.பி வைத்திலிங்கம் ஆகியோர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
வெற்றி பெற்ற ஜான் குமார் தலைவர்களிடம் வாழ்த்துகள் பெற்றார். காமராஜ் நகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ காமராஜ் நகர் தொகுதி மக்கள் எங்களின் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரச்சாரமும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆதரவு பிரச்சாரமும் ஒரு காரணம். துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இலவச அரிசிக்கு தடை விதிப்பது என ஆட்சிக்கும், மக்களுக்கும் எதிராக செயல்படுவதை உணர்ந்து அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வாக்களித்திருக்கிறார்கள்.
மேலும் "எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. எதிரி கட்சியாக செயல்படுகிறார்கள். அவர்களிடம் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை என்.ஆர்.காங்கிரஸ் 7 பேர், அ.தி.மு.க 4, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் 3. அவர்களிடம் 11 பேர் மட்டுமே உள்ளனர். எங்களிடம் 19 பேர் உள்ளனர். அப்படியிருக்க எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி அவர்கள் தம்மிடம் உள்ள எம்.எல்.ஏக்கள் ஓடி விடக்கூடாது என்பதற்காக, பொய்யான நம்பிக்கை கொடுத்து ‘ஆட்சி மாற்றம் ஏற்படும், ஆட்சி மாற்றம்’ என்று கடந்த மூன்றாண்டு காலமாகவே சொல்லி ஏமாற்றி வருகிறார். அவர்கள் சட்டமன்றத்துக்கு வருவதில்லை, மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை. மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து எந்த வித போராட்டமும் நடத்தியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு கவர்னர் கிரண்பேடி அவர்கள் கொடுக்கும் தொல்லைகளை எதிர்த்து கேட்பதில்லை.
இதன் வெளிப்பாடுதான் மக்கள் அவருக்கு தக்க பாடத்தை இந்த இடைத்தேர்தலில் அவர்களுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள். எங்களை அங்கீகரித்திருக்கிறார்கள். காமராஜ் நகர் வெற்றியை எங்களின் ஆட்சிக்கு கிடைத்த தீபாவளி பரிசாக நினைத்து கொண்டாடுகிறோம்” என்றார்.