
அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கலைஞரால் உருவாக்கப்பட்ட திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், திமுக தொண்டர்களின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. அதனால் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான திமுகவின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திமுகவின் பெருமை மிக்க வரலாறு.
தமிழ்நாட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்கமான திமுக அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜக சார்பில் சென்னையில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (12.02.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் பேசுகையில், “நான் பாஜக தலைவராகத் தொடர முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் இங்கிருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்” எனப் பேசியிருந்தார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.