காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜிவ்காந்தியின் 75 -வது பிறந்தநாளை தேசம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். ராஜிவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜிவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தென்சென்னை மாவட்ட காங்கிரசின் முன்னாள் தலைவரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜன்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "சென்னை மாநகராட்சியின் எல்லை மிகப் பெரியது. தமிழகத்தில் ஒன்னரை சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மேயர் இருக்கும் மாநகராட்சியெல்லாம் இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் ஒன்னரை தொகுதிதான் இருக்கிறது. ஆனால், சென்னையிலுள்ள 22 சட்டமன்ற தொகுதிக்கு ஒரே ஒரு மேயர் தான். மேலும், 200 வார்டுகள் மாநகராட்சியில் அடங்கியுள்ளது. மற்ற மாநகராட்சியிலுள்ள வார்டுகளில் மக்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 10,000 பேர் தான். ஆனால், சென்னையில் ஒரு வார்டில் 35 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. நிர்வகிப்பதிலும் அதிகாரிகள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மிகப்பெரியதாக இருந்த டெல்லி மாநகராட்சியை பிரித்தார். அதேபோல, நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல, நீண்ட நெடிய எல்லைகளைக்கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியை 3 மாநகராட்சியாக பிரிக்க வேண்டும். அதாவது, தென்சென்னை மாநகராட்சி, வட சென்னை மாநகராட்சி, மத்திய சென்னை மாநகராட்சி என 3 மாநகராட்சியாக பிரிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக்கொள்கிறேன்" என்றார் தியாகராஜன்.
தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காமராஜர் பெயரில் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கல்லூரியில் நடந்த மோசடி தொடர்பாக இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் இயக்குநர், கே.எஸ். அழகிரிக்கு சோகாஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கே.எஸ். அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அவர் மறுக்கும் பட்சத்தில், தலைவர் பதவியிலிருந்து அழகிரியை சோனியாகாந்தி நீக்க வேண்டும்" என்கிறார் மிக ஆவேசமாக தியாகராஜன்.