ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் இயற்கை எய்திய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேல் வரும் பிப். 27-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தபோது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கு வரும் பிப். 27ம் தேதி தேர்தல் என்றும் மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த 6 மாதங்கள் அவகாசம் இருக்கிறது. இந்நிலையில், திருமகன் இயற்கை எய்தி சில நாட்களிலேயே இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருப்பது அதிமுகவுக்கு வைக்கப்பட்டிருக்கும் செக் என அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது.
விமர்சகர்கள் இது குறித்து பேசும்போது, இவ்வளவு வேகமாக இடைத் தேர்தல் தேதி அறிவித்திருப்பது, அ.திமு.க. விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வைத்த செக்காவே பார்க்கப்படுகிறது. பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இரட்டை இலை சின்னத்தில் கையெழுத்துப் போடும் அதிகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமும் இருக்கிறது. ஆனால், அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வராததால் சின்னம் முடக்கப்பட்டு விடுகிற சூழலே இருக்கிறது. அதேசமயம், சின்னம் குறித்து இன்னும் தெளிவான முடிவு இல்லாததால், அதிமுக தேர்தலை புறக்கணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அதிமுக தரப்பில் விசாரித்தபோது, 1987ல் அதிமுக நிறுவனத் தலைவரும், அன்றைய முதல்வருமான எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து 1989ல் நடந்த தேர்தலிலும், 2016ல் அதிமுக பொதுச் செயலாளரும் அன்றைய முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ல் நடந்த இடைத் தேர்தலிலும் அதிமுக சின்னம் முடக்கப்பட்டது. ஆனால், அப்போதும் அதிமுக தரப்பிலிருந்து சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டனர்.
தற்போது வரை தேர்தல் ஆணையம் அதிமுகவின் சின்னத்தை முடக்கி அறிவிப்பு வெளியிடவில்லை. ஒருவேளை அப்படி நடந்தாலும், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டுத் தேர்தலை சந்திப்போம் என்கின்றனர் அதிமுகவினர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.க. சார்பில் யுவராஜ் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதிமுக த.மா.க.வை போட்டியிடவைக்க முயற்சிப்பதாகவும், ஆனால் சின்னம் பிரச்சனைக் காரணமாக த.மா.க. யோசனை செய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.