தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநருக்கு விசிக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டினர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பிற்காக வந்த வாகனங்களின் குறுக்கே கருப்புக்கொடியை எரிந்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். பின்னர் இச்சம்பவத்தைக் கண்டித்து சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஆளுநரின் பாதுகாப்பே கேள்விக்குறியாக உள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.