தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் ஆகிய பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து ஏற்கனவே பாமக விலகியிருக்கும் நிலையில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாஜகவும் விலகி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்மையில் அதிமுகவினர் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைமையிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நயினார் நாகேந்திரன் பேச்சே கூட்டணி பிளவுக்கு காரணம் என முணுமுணுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''எங்களுடைய மாநில தலைவர் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டார். எல்லா வார்டுகளிலும் பாஜக போட்டியிடுவதற்கான அத்தனை தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்.
'நயினார் நாகேந்திரன் சொல்லிய வார்த்தை தான் பாஜகவை தனித்து போட்டியிடுவதற்கான நிலைக்குத் தள்ளிவிட்டதா?' என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ''இல்லை... அவரே தான் பேசியது ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது. அது தவறுதான் என்ற விளக்கத்தைக் கொடுத்து விட்டார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இந்த விஷயத்தில் தவறு நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டார்கள். பாஜக தமிழக தலைவரும் அன்று நடந்த விஷயத்திற்கு அன்றே விளக்கத்தைக் கொடுத்து விட்டார். இந்த விஷயம் பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கான காரணம் இல்லை'' என்றார்.