அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கூடியுள்ளனர். ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் மண்டபத்திற்கு வருகை தந்த நிலையில் தாமதமாக வந்த இபிஎஸ் முதலில் மேடை ஏறினார். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் பின்னர் மேடையில் இடம்பெற்றார். ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது தீர்மானங்கள் முன்மொழிவு, வழிமொழிவு குறித்து அதிமுகவின் வைகை செல்வன் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்... அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... என ஆவேசமாக கத்தினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே.. தன்னாலே வெளிவரும் தயங்காதே... ஒரு தலைவன் இருக்கிறேன் மயங்காதே' என்ற பாடல் வரியை குறிப்பிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, ''23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர். அவர்கள் வைக்கின்ற ஒரே ஒரு கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பதுதான். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்து எப்பொழுது பொதுக்குழு கூடுகிறதோ அப்பொழுது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்'' என்றார்.