Skip to main content

“குண்டர் சட்டம் ரத்தானதற்கு அ.தி.மு.க. அரசு, இவ்வாறு துணை போயிருப்பது வருத்தமளிக்கிறது” - மு.க.ஸ்டாலின்

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

mk stalin

 

 

அதில், “அ.தி.மு.க. அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்தாகியிருக்கிறது.

இளம்பெண்களின் வாழ்வினை, இரக்கமனம் சிறிதுமின்றிச் சூறையாடிய இந்த இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும்போது, சாதாரணமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளைக் கூட அ.தி.மு.க. அரசின் மறைமுகக் கட்டளைப்படி, காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்காமல் கைவிட்டிருப்பது வேதனை தருகிறது. 

"ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்ற அடிப்படை சட்ட நடைமுறையைக் கூட, வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை, யாருக்கோ உதவிடும் நோக்கில், கோட்டை விட்டுள்ளது.

“குண்டர் சட்டத்தில் கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று ஏற்கனவே உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்புகளை எல்லாம் முற்றிலும் புறக்கணித்து - இந்த வழக்கில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளிகளை எப்படியாவது  தப்ப விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் ரத்தானதற்கு அ.தி.மு.க. அரசு, இவ்வாறு துணை போயிருப்பது வருத்தமளிக்கிறது; இது மிகவும் வெட்கக்கேடானது.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு, முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெறுகின்ற நேரத்தில், காவல்துறையும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் காட்டியுள்ள அலட்சியமும் ஆர்வமின்மையும்; இந்த வழக்கு விசாரணையின் போக்கையே மாற்றும் ஆபத்தாக மாறியிருக்கிறது.

இனி குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளிவர முடியும். இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களையும், மற்ற ஆதாரங்களையும், சகலவிதமான வழிமுறைகளையும் கையாண்டு, கலைக்க முடியும்.

பழமொழியைப் போல தமிழக மக்களிடையே பழக்கப்பட்டுப் போன, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இது போன்ற சூழலை ஏன் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது? யாரைக் காப்பாற்ற இந்த முயற்சிகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன; அந்தக் கேள்விகளுக்குள் மறைந்திருக்கும் விடையும் பொதுமக்களுக்குப் புரிகிறது.

குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும், அவர்களுக்குத் திரைமறைவில் வாய்மொழி உத்தரவிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு உடனடியாக இந்த நடவடிக்கையினை எடுக்காவிட்டால், அரசு மீது ஏற்கனவே ஏற்பட்டுள்ள சந்தேகம் வலுப்பெற்று விடும் என்பதை அ.தி.மு.க. அரசு உணர வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, முறைப்படியும் சட்டப்படியும், அதிகார வர்க்கத்தின் அழுத்தத்திற்கு ஆட்படாமலும் நடத்தப்பட்டு, இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த, கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் அனைவரும், சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.          

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் பயணம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Chief Minister M.K. Stalin trip to Kodaikanal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இந்நிலையில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.