டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், வன்ணாரப்பேட்டையிலும் இதுபோல கலவரம் வரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 2 நாட்களாக டில்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் செருப்புக் களையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப்பட வேண்டும் என்றும், டில்லி கலவரத்தை அடக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம். மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர். தமிழகத்தில் காவல்துறைக்கு இச்சுதந்திரம் எப்போது" என்றும் கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே ரங்கராஜன், டெல்லியில் நடப்பது போன்ற வெறியாட்டம் தமிழகத்திலும் நடப்பதற்குத் தூண்டும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி வருகிறார். தமிழகத்தில் அமைதியை குலைக்க நினைக்கும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.