
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக கூட்டணி கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசி அவர், “சேர சோழ பாண்டியர்கள் இருக்கும் போது அவர்களுக்கு பட்டாடைகளை நெசவு செய்து கொடுத்த மக்கள். நெசவு மட்டும் செய்யவில்லை. போர்க்களத்தில் முதலில் களத்தில் பாய்ந்ததால் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர்.
விஜயநகர பேரரசு நிறுவப்பட்ட பின், அந்த மன்னர்கள் முதலியார்களை அழைத்து உங்கள் மன்னர்களுக்கு செய்து கொடுத்தது போல் எங்களுக்கு செய்து கொடுங்கள் எனச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் முடியாது எனச் சொல்லிவிட்டார்கள். வேறு வழியின்றி குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராக்களை இறக்கினார்கள் இந்த விஜயநகர மன்னர்கள். மேலும், இந்த நிலத்தை தூய்மை செய்தது ஆதி தமிழ்க்குடிகள். அதேபோல், எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் எனச் சொன்ன பொழுது, முடியாது என தமிழர்கள் சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் ஆந்திராவில் இருந்து ஆதி குடிகளை இறக்கினார்கள். அவர்கள் தான் இங்கு இருக்கும் அருந்ததியினர்” எனக் கூறினார்.
சீமானின் இந்த பேச்சு இணையத்திலும் ஈரோட்டு அரசியல் களத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வேட்பாளர் இன்று வாக்கு சேகரிக்க சென்ற போது ஈரோடு கிழக்கில் இருந்த சில மக்கள் நாம் தமிழர் கட்சியினருக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். எங்களை அருந்ததியினர் எனக் கூறுகிறீர்கள். எங்கள் ஓட்டு மட்டும் செல்லுபடியாகுமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.