சமீபத்தில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா புஷ்பா எம்.பி. இணைந்தார்.தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனத்தின் போது, முக்கியமான பதவி தரப்படும் என்று பா.ஜ.க. தரப்பு சசிகலா புஷ்பாவுக்கு உறுதிமொழி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க.வில் ஐக்கியமான அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யான சசிகலா புஷ்பாவிற்கு, பா.ஜ.க.வில் மகளிரணி பொறுப்பு கொடுப்பதாக கூறி தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் மகளிரணியினரைத் தங்கள் கட்சிக்குக் கொண்டுவரும் அசைன்மெண்ட்டை சசிகலா புஷ்பாவிடம் பாஜக கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக நாடார், வன்னியர், முத்தரையர் உள்ளிட்ட சமூகப் பெண்களை ஒருங்கிணைக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அதேபோல் முதல்வர் எடப்பாடியின் தொகுதிக்குள் சசிகலா புஷ்பாவின் நாடார் சமூக வாக்காளர்கள் 40ஆயிரம் பேர்வரை இருப்பதைச் சுட்டிக்காட்டி, முதலில் அங்கே இருந்து களப்பணியை ஆரம்பிக்கும்படியும் பா.ஜ.க. தலைமை புஷ்பாவுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.