Skip to main content

“பிறமொழி மக்களை இந்தி வாலாக்களாக மாற்றுவதே பாஜக அரசின் நோக்கம்” - திருமாவளவன்

Published on 25/02/2025 | Edited on 25/02/2025

 

BJP aims non-Hindi speakers into Hindi-speaking people says Thirumavalavan

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.  தமிழக அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே; மத்திய அரசு இந்தியைத் திணிக்கக் கூடாது என்று ஓரணியில் நின்று கண்டனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., “இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட  ஒரு அரசியல் நடவடிக்கை.  இந்தியாவை ‘ஒரே நாடு, ஒரே  மொழி’ என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி நீண்டகாலமாக  நடந்து வருகிறது. வடக்கே ஒரு சில மாநிலங்களில் மட்டும் தான் இந்தி பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், இந்தி தேசிய மொழியாக, அலுவல் மொழியாக மாற வேண்டும் என்பது இந்தி பேசக்கூடியவர்களின் விருப்பமாகவும், செயல்திட்டமாகவும் இருக்கிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை அவர்கள் பிராந்திய மொழிகள் என்று சொல்கிறார்கள்; ஆனால் இந்தியும் ஒரு பிராந்திய மொழிதான் என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். இந்தி மொழியை பிற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது.

மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார். ஆனால் நடைமுறையில் மூன்றாவது மொழி இந்திதான் என்று மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் இருக்கிறது. மாநில அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் அதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். இப்போது பி.எம் ஸ்ரீ என்ற பள்ளிகளை மத்திய அரசு நிறுவுகிறது. அந்த பள்ளிகளில் மும்மொழி கொள்கை  நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசு தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் அத்துடன் சேர்ந்து ஏதாவது இந்திய மொழி ஒன்றைக் கற்க வேண்டும் என்று கூறுகிறது. அப்படி இருக்குமாயின் இந்தி பேசக்கூடியவர்கள் எந்த பிராந்திய மொழியை மூன்றாவது மொழியாக கற்கின்றனர் என்று மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளை மட்டுமே கற்கின்றனர், பேசுகின்றனர். ஆனால் பிறமொழி பேசக்கூடிய மக்கள் தாய் மொழி மற்றும் ஆங்கில மொழியுடன் சேர்ந்து இந்தியை கற்க வேண்டும் என்கின்ற முயற்சியை அவர்கள் தொடர்ந்து செய்துக் கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக அரசு ‘ஒரே தேசம், ஒரே கலாச்சாரம்’ என்பதைப் போல ‘ஒரே தேசம், ஒரே மொழி’ என்று நிலையை உருவாக்க முயல்கிறது.

இந்தியாவின் உள்ள ஏதோ ஒரு மொழியோ அல்லது அயல்நாட்டு மொழியோ கூட மூன்றாவது மொழியாக படிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அது தனி நபரின் விருப்பம். ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் ஒரு கொள்கை நிலைப்பாட்டை வைத்து  இந்தி அல்லாது பிற மொழி பேசும் மக்களின் மீது திணித்து இந்தி பேசு இந்தி வாலாக்களாக மாற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதைத்தான் நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம். ஆனால் அவர்களின் பிடிவாதத்தில் இருந்து மாறவில்லை  என்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு ஒரு போது இடமிருக்காது என்று மீண்டும் அழுத்தமாக சொல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்