Skip to main content

“மிகப்பெரிய உரிமைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது” - முதல்வர் பேட்டி!

Published on 25/02/2025 | Edited on 25/02/2025

 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 - 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இதனையடுத்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து 2025 - 2026ஆம் ஆண்டிற்கான முன்பணம் மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (25.02.2025) நண்பகல் 12 மணியளவில் 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தனர்.

அது மட்டுமின்றி இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் தமிழகம் மிகப்பெரிய உரிமைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே வரும் 5ஆம் தேதி (05.03.2025) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு  செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

தொகுதிகள் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் மீது ஆபத்தான கத்தி தொங்கிக் கொண்டுள்ளது. எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளதாகத் தொடர்ந்து மத்திய அரசால் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் உள்ளன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 2026ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மறுசீரமைப்பு செய்ய உள்ளனர். இது போன்ற மறுசீரமைப்பு பொதுவாக மக்கள் தொகை கணக்கீட்டின்படி செய்யப்படுகிறது.

CM says TN has been forced into a situation where it is necessary to hold a huge rights struggle

மக்கள்தொகை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டினுடைய மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கை பொருத்தவரை தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. பல பத்தாண்டுகளாக வெற்றிகரமாக குடும்ப கட்டுப்பாடு, பெண்கள் கல்வி மற்றும் சமூக, சுகாதார வளர்ச்சிகள் மூலம் பல சாதனைகளைத் தமிழகம் புரிந்துள்ளது. மக்கள் தொகை குறைவாக இருக்கிற காரணத்தினால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால் தமிழ்நாட்டில் இருக்கின்ற தொகுதிகளில் எட்டு தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு தொகுதி மறு சீரமைப்பு செயல்பட்டால் தமிழகத்திற்கு 38 தொகுதிகள் என்பதிலிருந்து 31 தொகுதிகள் உருவாக்கப்பட்டு 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது  நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல. மாநில உரிமையைச் சார்ந்தது என்பதை மறந்து விடக்கூடாது. தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சனைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் தலைவர்கள் ஒன்றிணைந்து முதற்கட்டமாக அணைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் அரசியல், கட்சி சார்பின்றி கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்