சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இடையே உள்ள மோதல் குறித்தும், இதன் பின்னால் பாஜக உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு தமிழிசை, ''சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியும், திமுகவும்தான் என்று வைகோ சொல்லிக்கொண்டிருந்தார். எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் வரை எதுவும் பேசாமல், தேர்வு செய்யப்பட்ட பின்பு இன்று காங்கிரஸ் கட்சியை குறை கூறுகிறார்.
வைகோ கூறுவதிலும் சில கருத்துக்கள் இருக்கிறது. கே.எஸ்.அழகிரி கூறுவதிலும் சில கருத்துக்கள் இருக்கிறது. பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். இன்று மீண்டும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். இந்த மோதல் விவகார பின்னணியில் பாஜக இல்லை'' என்றார்.