தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு பொதுக்கூட்டத்தில் மட்டுமே பேசிவிட்டுச் செல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த முறை யாரும் எதிர்பாராத வகையில் சேலத்தில் முக்கிய பகுதிகளில் தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து, தமிழக தேர்தல் களம் மேலும் சுறுசுறுப்படைந்துள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் ராஜேந்திரன், வீரபாண்டி தொகுதி வேட்பாளர் மருத்துவர் தருண், ஏற்காடு தொகுதி வேட்பாளர் தமிழ்செல்வன் ஆகியோரை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் செவ்வாயன்று (மார்ச் 16) வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
இதற்காக மு.க.ஸ்டாலின், செவ்வாயன்று காலை திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், பார்த்திபன் எம்பி ஆகியோர் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து அவர், சேலம் செவ்வாய்பேட்டை பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மார்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களைச் சந்தித்து உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அப்பு செட்டி தெரு, கண்ணார தெருக்களில் நடந்து சென்ற அவர், வீடு வீடாகச் சென்று திமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். முதல்வர் வேட்பாளராக அறியப்படும் ஒருவர், சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்து தெருத்தெருவாக நடந்து சென்று கட்சியினருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அப்பகுதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
தேர்தல் வாக்கு சேகரிப்புக்கிடையே, செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு உணவு விடுதிக்குள் சென்ற ஸ்டாலின், தாகமாக இருப்பதாகக் கூறி மோர் வாங்கி பருகினார். அந்த விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களிடமும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மாலையில், கெஜல்நாயக்கன்பட்டி பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
பார்த்திபன் எம்பி., மாநகரச் செயலாளர் ஜெயகுமார், துணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், நெசவாளர் அணி அசோக் டெக்ஸ் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஸ்டாலினுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.