Skip to main content

மோடியிடம் விருது பெறும் தமிழக அமைச்சர்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

 

மத்திய அரசின்  'தூய்மை இந்தியா' திட்டத்தில் சிறந்த மாநகராட்சிக்கான விருதினை, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி! இதற்கான விழா, டெல்லியில் நாளை நடக்கிறது. 
 

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழக உள்ளாட்சி துறை அப்படி என்ன சாதித்தது? என கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, "சேவையே கோவை ; கோவையே தேவை என்கிற தலைப்பில் கோவை மாநகராட்சியை சுத்தப்படுத்தி அழகுப் படுத்தும் செயல் திட்டத்தை அமைச்சர் வேலுமணி சமீபத்தில் துவக்கினார். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசித்த போது, 'எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் குப்பைகளை சாலை ஓரங்களிலும், கண்ட கண்ட இடங்களிலும் கொட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மக்கள். குப்பைத் தொட்டிகள் இருந்தாலும் அதில் குப்பைகளை கொட்டுவதில்லை. அப்படியே வீசிவிட்டு சென்று விடுகின்றனர். அதனால், கோவையை குப்பை இல்லா நகரமாக மாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் விரயமாகின்றன' என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

modi



 

அதன் தொடர்ச்சியாக நடந்த விவாதங்களில், குப்பையை மக்கள் கொட்டும் இடங்களில் பூக்களை வைத்தும் மாவுகளை வைத்தும் கோலங்கள் வரையுங்கள். பூக்கோலங்களையும் மாக்கோலங்களையும் பார்க்கும் மக்கள் அந்த இடங்களில் குப்பையை கொட்டமாட்டார்கள். குப்பைத் தொட்டியை தேடிச் சென்று குப்பையைக் கொட்டுவார்கள். இந்த பழக்கத்தை நம் மக்களிடம் இயல்பாக நிலை நிறுத்திவிட்டால் அதன்பிறகு தாங்கள் வசிக்கும் பகுதிகளை குப்பைக்கூளங்களால் அசுத்தமாக்க மாட்டார்கள். கோலம் வரைவதற்காக அந்தந்தப் பகுதி பெண்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம். கோலம் வரைவதை ஒரு இயக்கமாகக் கூட உருவாக்கலாம் ' என அமைச்சர் வேலுமணி யோசனைத் தெரிவித்திருக்கிறார். அந்த யோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள, மத்திய அரசின் ' தூய்மை இந்தியா ' திட்டத்தின் கீழ், மாக்கோலம் பூக்கோலம் பெண்கள் இயக்கத்தை அமைச்சர் வேலுமணி துவக்கி வைக்க, கோவை மாநகராட்சியின் குப்பைப் பகுதிகள்  தற்போது கோலங்களால் காட்சியளிக்கின்றன. கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுதல், கழிவுகள் கொட்டுதல்,  மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் போன்ற அசுத்தங்கள்  ஒழிக்கப்பட்டன. இதனால் கொசுக்களின் உற்பத்தி தடுக்கப்பட்டிருப்பதால் டெங்கு, மலேரியா, டைப்பாய்டு போன்ற நோய்களும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த காரணங்களுக்காகத்தான் கோவை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் வேலுமணிக்கு விருது கிடைத்திருக்கிறது " என பின்னணிகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

Minister



 

இது ஒருபுறமிருக்க, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  உத்தரவின் பேரில், அமைச்சர் வேலுமணியின் கண்காணிப்பில் உள்ளாட்சித் துறை சார்பில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்  இந்தியாவிலேயே முதல்முறையாக 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பிரமாண்டமான "கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை" சென்னை கொடுங்கையூரில்  உருவாக்கியிருக்கிறது. 348 கோடி ரூபாய் மதிப்பில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 3 - ஆம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்தியாவிலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் இது ஒரு மைல்கல் என  உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்