தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், மாநில அரசு நடத்தும் 'செட் தேர்வு, தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நெட் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த பணியிடங்களை நிரப்பப்படும் போது ஆய்வு படிப்புகளை (பி.ஹெச்.டி.) முடித்தவர்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் என எடப்பாடி அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது உயர்கல்வித்துறை.
இந்த அரசாணைக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனறர். இது குறித்து கண்டன் தெரிவித்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் , ''முதுகலை மற்றும் எம்.பில் பட்டம் பெற்றுவர்கள், பி.எச்.டி முடித்தவர்கள், இந்த செட், நெட் தேர்வை எழுதலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உயர்கல்வித் துறையின் அரசாணையின் காரணமாக, முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, 'செட்', 'நெட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்று, உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புக்காக போராடி வரும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
ஏழை, எளிய மாணவர்கள், முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முடியாத காரியமாகும். அதே போன்று, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பி.எச்.டி., ஆய்வுப் படிப்பைத் தொடருவதற்கு கல்வி நிறுவனங்களில் ஊக்கத்தொகையோ, அல்லது மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையோ அனைவருக்கும் கிடைப்பது இல்லை.
இச்சூழலில், பி.எச்.டி. முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது சமூக நீதிக்கு எதிரானதாகும். எனவே, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக!