Skip to main content

“அண்ணாமலை என்றும் மாறப் போவதில்லை” - பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

"Annamalai will never change" - BJP Vice President Karu Nagarajan

 

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியது அதிமுகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பாஜக தேசிய தலைமையின் கடமை. எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது” எனக் காட்டமாக பதில் அளித்திருந்தார்.

 

இந்நிலையில் ஜெயக்குமாரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காகப் படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

 

தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. அண்ணாமலையை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார். தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரி செய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

 

பதவிக்கும் பவுசுக்கும் ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை. பல்வேறு புதிய திட்டங்களோடு மக்கள் வாழ்வு வளம் பெறும் கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

ஜெயக்குமார் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத் தான். உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை. தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று அமித் ஷா கலந்து கொண்டது கூட ஜெயக்குமாருக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகின்றேன். எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார்.

 

கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான். இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. அண்ணாமலையின் ஆங்கிலப் பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்