தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் அண்ணாமலை குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''பல்வேறு குற்றச்சாட்டுகளை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற நோக்கத்தில் வாய்க்கு வந்த கருத்துக்களை, குற்றச்சாட்டுகளை, அவதூறுகளைப் பரப்புகின்ற நோக்கத்தில் நீங்கள் சொல்லக்கூடிய நபரின் (அண்ணாமலை) செயல்பாடுகள் இருக்கின்றது. என்னுடைய சொத்துப் பட்டியலை பேரணி போகும்போது வெளியிடுவேன் என்று சொல்கிறார். ஏற்கனவே அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது அந்த நபருடைய சொத்துப் பட்டியலும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த தேர்தலின்போது இணைக்கப்பட்ட சொத்துப் பட்டியல் இருக்கிறது. நான் அதிகாரியாக பணிபுரியும்போது எவ்வளவு சம்பளம் வாங்கினேன், என்ன வருமானம் வந்தது என்பதெல்லாம் அதில் இருக்கும். எவ்வளவு அசையும் சொத்து; எவ்வளவு அசையாத சொத்து எல்லா விவரங்களும் அதில் இருக்கும் என்கிறார். அதை ஏன் மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
நான் சிம்பிளாக ஒரே ஒரு கேள்வி கேட்டேன் வாங்கின கடிகாரத்திற்கு பில் இருக்கா இல்லையா என்று. நீங்கள் தேர்தலுக்கு முன்னால் அந்த கடிகாரத்தை வாங்கி இருந்தால் கணக்கில் காட்டியிருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின்னாடி வாங்கி இருந்தால் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தேன் பில்லை வெளியிடுங்கள் என்று. ஒரு மணி நேரம் முடிந்து ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் ஆகிவிட்டது. 'மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை' உங்களுடைய மடியில் கனம் இருக்கு. எனவே வழியில் பயந்துதான் போக வேண்டும். தூய்மையான அரசியல்வாதியாக இருந்தால், பில் இருந்தால் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே. இந்த டைமில் வாங்கினேன்; இந்தக் கடையில் வாங்கினேன்; இந்த விலைக்கு வாங்கினேன் என்று சொல்லலாமே. அதை ஏன் மறைக்க வேண்டும். ஏன் பேரணி போகும்போது வெளியிடுவேன் என்று சொல்லணும். முடிஞ்சா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும். எந்தக் கடையில வாங்குனது; என்ன விலைக்கு வாங்கனது என்று நிரூபிக்க வேண்டும்.
ஒன்று பணம் கொடுத்து வாங்கி இருந்தால் அக்கவுண்டில் இருந்து அன்னைக்கு பணம் எடுத்திருக்க வேண்டும் அல்லது அக்கவுண்டில் இருந்து பணம் கொடுத்திருந்தால் அதற்கான எவிடன்ஸை நீங்கள் வெளியிட வேண்டும். யாரோ கொடுத்தது; யாருகிட்டையோ வெகுமதியாக வாங்கினது. அதனால் வெளியிட முடியவில்லை. பில் தயாராகிக் கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என்று சொல்லும் அந்த நபர், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் என்று ஒரு நடைப்பயணம் போலமே. 410 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இன்னைக்கு 1,100 ரூபாயை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் அல்லவா. மக்கள் அதிலும் பாதிக்கப்படுகிறார்கள். சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் வரும் என்றார்கள், யாராவது ஒருவர் வாங்கி இருக்கிறீர்களா’' என்றார்.