பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மின்சாரக் கட்டணம் உயர்வு, வரையறையில்லாமல் அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு காரப்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், எதிர்க்கட்சிகள் பற்றியும், அவர்களது கூட்டணி(INDIA)பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், “ இந்தியா என்று சொன்னால் உள்ளத்திலேயே ஒரு உணர்வு இருக்கும். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளனர். அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவினைவாதம் பேசிய கட்சிகள். உதாரணமாக திமுக, 1960 காலகட்டத்தில் பிரிவினை பேசிய கட்சி. இன்றைக்கும் மாநிலங்களுக்குள் பிரிவினையைப் பற்றிப் பேசும் கட்சி திமுகதான். அவர்கள் இந்தியா என்று பேசும் போது வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. ஜேஎன்யூவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாம் சென்று தேசத்திற்கு எதிராகப் பேசியவர்கள் காங்கிரஸ்காரர்கள், ஆனால் தற்போது அவர்கள் எல்லாம் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறார்கள்.
எங்கள் ஊரில் ஒரு கதை சொல்லுவார்கள், நாய் புலியாக மாறவேண்டும் என்று உடம்பில் புலியைப் போல் கோடு போட்டுக்கொள்ளுமாம், ஆனால் நாய் என்னதான் புலி மாதிரி உடம்பில் கோடு போட்டுக்கொண்டாலும் நாய் என்றைக்கும் புலியாக மாற முடியாது. அதுபோலத்தான் இந்தியா என்று கூட்டணிக்குப் பெயர் வைத்துவிட்டால் அவர்கள் இந்தியாவாக முடியாது” என்று கடுமையாக விமர்சித்தார்.