அதிமுகவை காப்பாற்ற அண்ணாமலை வாய்ப்பினை உருவாக்கித் தந்தார் என்றும் ஆனால், இபிஎஸ் தன்னை சமரசம் செய்து கொண்டார் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூரில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களோடு சந்தித்துப் பேசி செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்க இருக்கிறேன். தொடர்ந்து 2 நாட்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை சந்தித்து பரப்புரை செய்து வாக்கு சேகரிக்க இருக்கிறேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் முன் நலனுக்கானதாக உள்ளது.
தென் இந்தியாவில் கர்நாடகத்தில் கால் ஊன்றிக்கொண்டு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக வெறுப்பு அரசியலை விதைக்கிறது. சிறும்பான்மையினருக்கு எதிராக பிரிவினை வாதத்தை ஊக்கப்படுத்துகிறது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டியது தென் இந்திய மாநிலங்களின் நலனுக்கான முன் நிபந்தனையாக உள்ளது என்பதை உணர்ந்து விசிக இந்த நிலைப்பாடை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.
கர்நாடகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது குறுக்கிட்டு கன்னட மொழிக்கான வாழ்த்துப்பாடலை பாடும்படி வெளிப்படையாகவே பேசியுள்ளார். அந்த பாடலை இடையே நிறுத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அதனை வேடிக்கை பார்த்து அமைதியாக காத்திருந்தார் என்பது அதிர்ச்சியை தருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க செய்துவிட்டு அதனை அவமதித்துள்ளனர். இது வேதனை அளிக்கிறது. இதற்கு அண்ணாமலை தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
கர்நாடகத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்திய பின் வாபஸ் பெற்றது. அண்ணாமலைக்கு எதிராக முரண்பாடாக பேசிய இபிஎஸ், அமித்ஷாவை பார்த்த பின் எனக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இல்லை என சொல்கிறார். அதிமுகவிற்கு நல்ல வாய்ப்பு உருவானது. தனித்து இயங்குவதற்கும், கட்சியை காப்பதற்கும் அண்ணாமலையே வாய்ப்பை உருவாக்கி தந்தார். என்ன நெருக்கடியோ இபிஎஸ் சமரசம் செய்து கொண்டு பாஜக உடன் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார். இது திமுக கூட்டணிக்கு நலம் பயக்கும். அதிமுக பாஜக கூட்டணி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தன்னை தற்காத்துக்கொள்ள மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு பணிந்து இபிஎஸ் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளார் என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ எனக் கூறினார்.