
பாப்புலர் ஃப்ரண்ட்-அலுவலகம் மற்றும் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியினர் கூறுகையில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் மீது தொடர்ச்சியான அடக்குமுறையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது மத்திய அரசு.
அதற்காக CBI, NIA, ED (அமலாக்கத்துறை) போன்ற ஏஜன்ஸிகளை அடியாட்கள் போன்று பயன்படுத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள், மக்கள் மீது UAPA கருப்பு சட்டத்தை கொண்டு ஒடுக்கி வருகின்றனர்.

குறிப்பாக மக்களுக்காக குரல் கொடுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற சமூக அமைப்புகள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் ஊடகங்களில் பொய் செய்தியை பரப்புவது, NIA, ED (அமலாக்கத்துறை) போன்ற அரசு ஏஜன்ஸிகளை கொண்டு 'ரெய்டு' என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்வது என ஜனநாயகத்தின் குரல்களை நெறிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 3 அன்று பாப்புலர் ஃப்ரண்ட்-அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் அத்துமீறலை நிகழ்த்தியது. இது முழுக்க ஆர் எஸ் எஸ்-சால் திட்டமிடப்பட்டு பாஜக அரசின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட அத்துமீறலாகும்.

அரசை கேள்வி கேட்கும் நபர்களை குறிவைத்து மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற மக்கள் விரோத போக்கில் இருந்து ஜனநாயகத்தை காக்கவும் ஆர் எஸ் எஸ் - சின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத்துறையை கண்டித்தும் டிசம்பர்-11 சென்னை சேப்பாக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி ஆர்ப்பாட்டத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் மக்கள் இயக்கம். இந்திய அரசியல் சாசனத்தின் படி செயலாற்றுகிறது. இந்தியாவின் ஜனநாயகம், மதசார்பற்ற கோட்பாடுகளை உயர்த்தி பிடிக்கின்றது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. மக்களை பிளவுபடுத்தும் மனுதர்ம ஆட்சிக்கு எதிராக உரக்க குரல் கொடுக்கிறது. அரசின் மக்கள் விரோத சட்டங்கள் செயல்பாடுகளுக்கு எதிராக போராடுகிறது. எனவே தான் மத்திய அரசு பாப்புலர் ஃப்ரன்ட் ஐ குறிவைக்கிறது.
அதே சமயம் ஆர் எஸ் எஸ் ஏற்றத்தாழ்வுகளை உயர்த்தி பிடிக்கிறது. சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் இந்தியாவில் இடம் இல்லை என்று கூறுகிறது. இவற்றிற்கு எதிராக பாப்புலர் ஃப்ரன்ட் உறுதியாக போராடுவதால் மத்திய அரசை இயக்கும் ஆர் எஸ் எஸ் ஏஜென்சிகளை கொண்டு பாப்புலர் ஃப்ரன்ட் - ஐ முடக்க நினைக்கிறது. வலுவான சட்ட போராட்டங்கள் மூலமும், மக்கள் திரள் போராட்டங்கள் மூலமும் இத்தகைய சூழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரன்ட் முறியடித்து தொடர்ந்து மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கும் என்று கூறினார்.