வெள்ளந்தாங்கியாய் இருந்த ஏரல் நகரம் கிட்டத்தட்ட மூழ்குகிற நிலைமை. அந்த எல்லையைத் தாண்டிச் சீறிய வெள்ளம் ஏரல் நகரைப் பதம் பார்த்ததுடன் அந்நகருக்கான நான்கு பக்கமும் உள்ள எல்லையைத் துண்டு துண்டாக்கியது. இதனால் நகருக்கு உதவிக்கரம் நீட்ட செல்வதற்குக் கூட பாதைகள் அற்றுப் போனதால் ஏரல் நகரம் பட்ட துயரங்கள் வெளி உலகிற்குத் தெரியவில்லை.
பின்னர் எப்படியோ தகவல்கள் லீக்காகி வெளியே கசிய, எம்.பி.கனிமொழி தன்னோடு கட்சியினரை உடனழைத்துக் கொண்டு கடும் சிரமத்திற்கிடையே ஏரல் நகருக்குள் சென்றவருக்கு அதிர்ச்சி. சாலை முழுக்க வெள்ளம் கொள்ளளவையும் தாண்டிய உயரம். சிதைந்த வீடுகள். நொறுங்கிய சாலைகள், துண்டாகிப் போன ஏரல் பெரிய பாலம். சற்றும் தளராத எம்.பி. கனிமொழி இன்ஸ்டண்ட்டாக நான்கு நாட்களாக அன்ன ஆகாரமின்றித் தவித்த மக்களுக்கு உதவியவர், பின்பு அவர் மூலம் ஏரல் சீரழிவு பற்றி முதல்வர் ஸ்டாலின் வரை போக, தாமதமில்லாமல் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இருவரையும் அங்கு விரையச் செய்திருக்கிறார்.
துண்டாகிப் போன நகருக்கான இணைப்புச் சாலை மற்றும் உடைந்து போன பெரிய பாலம் ஆகியவற்றை போர்க்கால வேகத்தில் செப்பனிடச் செய்து முதலில் சகஜமான போக்குவரத்தை சீராக்கப் பணிக்க, அமைச்சர்களும் வேறு எங்கும் நகராமல் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறார்கள். பின்னர் மக்களின் உடல் நலம் கருதி சுகாதாரத்துறை அமைச்சரான மா. சுப்பிரமணியமும் ஏரலில் முகாமிட்டிருக்கிறார்.
பத்து நாட்களாக அமைச்சர்கள் ஏரல் நகரிலேயே மையமிட்ட நிலையில், ஏரலை உள்ளடக்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. மா.செ.வும், ஏரல் நகருக்கு வெகு சமீபமாகக் குடியிருக்கும் அமைச்சர் அனிதா ஸ்பாட்டுக்கு வராமல் போனதையறிந்த அமைச்சர் மூர்த்தி, நிலைமையைத் தெரிவித்து ஏரல் நகருக்கு வரும்படியும், நீங்களும் வந்தால் இங்க நிவாரணப் பணிகள் விரைவில் முடியும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அழைத்திருக்கிறார். ஆரம்பம் முதல் அமைச்சர்களுக்கு கட்சியின் முக்கிய புள்ளியும், தி.மு.க.வின் தெற்கு மாவட்ட வர்த்தகர் அணித் தலைவரும் ஏரலின் பண்டாரவிளைப் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் நிவாரணப் பணிகளில் உதவி செய்து வருவதையறிந்த அமைச்சர் அனிதா, தன்னால் அங்கு வர முடியாது. உங்களுடனிருக்கிற கட்சி நிர்வாகி சுந்தர்ராஜனைக் கொண்டே வேலையைப் பாருங்கள் என்று சொல்லி முடித்துக் கொண்டாராம்.
ஏரியா அமைச்சர் இப்படியா பதில் சொல்வது என்ற அதிர்ச்சியில் அப்செட் ஆகியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி. அதன்பின் வேகமெடுத்த பணிகள் விரைவில் முடிந்ததையடுத்து கடந்த வாரம் ஏரல் நகருக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் மட்டும் தலை காட்டியிருக்கிறார் அனிதா. அமைச்சர் உதயநிதியின் நிகழ்ச்சியில் இல்லாமலிருந்தால் விவகாரமாகிவிடும் என்பதால்தான் அதனைத் தவிர்க்கிற வகையில் தலைகாட்டியிருக்கிறார் அனிதா. இந்த சம்பவம் உளவுத் துறையின் மூலம் மேல்மட்டம் வரை போய்விட்டது என்கிறார்கள் உள்ளூர் கட்சியினர்.
சுந்தர்ராஜன் என்றாலே அமைச்சர் அனிதாவுக்கு ஏன் அலர்ஜி என்ற நம் கேள்விக்கு, “கடந்த ஊராட்சித் தேர்தலில் ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் ஊராட்சித் தலைவி தேர்தலுக்கு தன் நெருங்கிய உறவினரை வேட்பாளராக கட்சியின் அறிவிப்புப்படி நிறுத்தியிருக்கிறார் தி.மு.க.வின் தெ.மாவட்ட வர்த்தக அணித் தலைவரான சுந்தர்ராஜன். ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மிகவும் அறியப்பட்டவர் சுந்தர்ராஜன். தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய மா.செ. அனிதா அவருக்கு எதிராகச் செயல்பட்டதோடு அதே ஊராட்சிக்குத் தலைவி போட்டியிலிருந்த எதிர் வேட்பாளரும், தூத்துக்குடி அ.தி.மு.க.வின் தெற்கு மா.செ.வான முன்னாள் அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ. சண்முகநாதனின் மகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவரைத் தலைவியாக்கியதுமில்லாமல் சொந்தக் கட்சி வேட்பாளரையே அனிதா தோற்கடித்தது சுந்தர்ராஜனை உள்ளுக்குள் ஆத்திரத்தில் வைத்திருக்கிறது. இந்தப் பகைக்கு அஞ்சித்தான் அமைச்சர் அனிதா, ஏரலுக்கு வரச்சொல்லி அமைச்சர் மூர்த்தி அழைத்தபோது மறுத்திருக்கிறார்” என்கிறார்கள். தற்போது, வில்லங்கமாகியிருக்கிறது இந்த விவகாரம்.