
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தேமுதிகவின் 19வது பொதுக்குழு மற்றும் தலைமைச் செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று (30.04.2025) நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவைத் தலைவராக வி. இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளராக ப. பார்த்தசாரதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேமுதிக துணை செயலாளர்களாக எம்.ஆர். பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முடிவுகள் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக விஜய பிரபாகரன் தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.