Skip to main content

“பா.ஜ.க. - த.வெ.க. இடையே கூட்டணியா?” - நயினார் நாகேந்திரன் பதில்!

Published on 30/04/2025 | Edited on 30/04/2025

 

BJp Tvk Alliance Nayinar Nagendran answers

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரின் பதவிக் காலம் முடிந்தது. இதனையடுத்து புதிய மாநிலத் தலைவராக அக்கட்சியின் தமிழகச் சட்டமன்றக் குழு தலைவரான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கடந்த 12ஆம் தேதி (12.04.2025) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். அதன்படி கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் (28.04.2025) சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா, நைனார் நாகேந்திரனுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும் சந்தித்து பேசினார்.

இதனையடுத்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் நேற்று (29.04.2025) சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், ‘த.வெ.க.வுடன், பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக (அரசல் புரசலாக ஒரு தகவல் வருகிறது) தகவல் வந்துள்ளது?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு நயினார் நாகேந்திரன், “நீங்கள் சொல்கிற மாதிரி அரசல் புரசல் எனக்கு தெரியவில்லை. நான் நேற்று தான் பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பார்த்து விட்டு வந்திருக்கிறேன்” எனப் பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்