கரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துவருகிறது. வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் கரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்தை அடையுமென வல்லூநர்கள் தெரிவித்துவருகின்றனர். தற்போதே பல மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுபாடு நிலவிவருகிறது. அதேபோல், இந்தியாவில் பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இருந்தபோதிலும் தற்போது கரோனாவில் இருந்து தற்காத்துகொள்வதில் தடுப்பூசி முக்கிய பங்கை வகிக்கிறது. இந்தியாவில் முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த வயது வரம்பை மத்திய அரசு 45 ஆக குறைத்தது. தற்போது இதன் வயது வரம்பை 18 என குறைத்துள்ளது. அதேவேளையில் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தடுப்பூசி இலவசமா அல்லது பணம் கொடுத்து பெற்றுகொள்ள வேண்டுமா என்பதை மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இவற்றை கண்டித்து காங்கிரஸின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியாவில் கரோனா பரவத் தொடங்கி பாதிப்புகள் கடந்த ஆண்டு மார்ச் 4ல் 28 ஆக இருந்தது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24 அன்று முன்னறிவிப்பு இல்லாமல், பொது ஊரடங்கை பிரதமர் மோடி பிரகடனம் செய்தார். தொடர்ந்து, ஊரடங்கை மே 14 வரை நீடித்தார். இதனால், ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவை வார்த்தைகளால் வடிக்க இயலாது.
ஆனால், பொது ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, 'பாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. கரோனா எதிர்ப்புப் போர் 21 நாளில் முடிந்துவிடும்' என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தார். ஆனால், இப்படிக் கூறியதிலிருந்து 13 மாதங்கள் கடந்து, இந்தியாவில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற அவலநிலையைப் பார்க்கிறபோது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.
ஏப்ரல் 27 நிலவரப்படி, மொத்த பாதிப்பு 3 லட்சத்து 79 ஆயிரமாகவும், இறப்பு 3,535 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சம். மொத்த இறப்பு 2 லட்சத்திற்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது.
உலக தடுப்பூசி உற்பத்தியில் 60 சதவிகிதத்தை இந்தியா உற்பத்தி செய்வதாகவும், உலக நாடுகளுக்கு வழங்குகிற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அமித் ஷா உள்ளிட்ட மத்திய பாஜக அரசு அமைச்சர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள்.
ஆனால், கரோனாவினால் ஏற்படுகிற உயிரிழப்புகளை முன்கூட்டியே தடுப்பூசி போட்டுத் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளில் கரோனா இறப்பில் பிரேசில் முதல் இடத்தை வகித்து வந்தது. ஆனால், ஏப்ரல் 27இல் இந்தியாவில் கரோனா இறப்பு 3,000-ஐ நெருங்கிய நிலையில், பிரேசிலை மிஞ்சுகிற வகையில் உலக நாடுகளில் முதன்மை இடத்தை இந்தியா பெற்றிருக்கிறது. இத்தகைய கொடூரமான மனித இழப்புகளுக்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் தரப் போகிறார்?
இந்திய மக்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி போட முடியுமோ, அதன்மூலமாகத்தான் கரோனாவின் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க முடியும். ஆனால், அறிவிக்கப்பட்ட தடுப்பூசி கொள்கை கரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்குமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 9 சதவிகிதத்தினருக்குத்தான் தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டிருக்கிறது. இதில், 1.7 சதவிகிதத்தினருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தடுப்பூசி போடுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என, தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறது. தமிழக அரசு அறிவித்திருக்கிற இந்தக் கொள்முதலை எந்த நிறுவனத்திடம் செய்யப்போகிறது? தடுப்பூசியின் விலை என்ன? மத்திய அரசு மூலமாக கொள்முதல் செய்யப்போகிறதா? தனியார் நிறுவனங்களிடம் சந்தை மூலமாக கொள்முதல் செய்யப்போகிறதா? என்பது குறித்து, தமிழக அரசு அறிவிப்பில் எந்தக் குறிப்பும் இல்லை. இதில், மிகுந்த குழப்பம் நிலவுகிறது.
மத்திய பாஜக அரசைப் பொறுத்தவரை 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத்தான் மாநில அரசுகள் மூலமாக இலவசத் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துவிட்டது. ஆனால், 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து, மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதன்படி, 18 வயது முதல் 44 வயதுக்குட்படவர்களுக்கு தடுப்பூசி போடுகிற பொறுப்பு மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சுமையைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா? இதுகுறித்து, முதல்வர் கடிதம் எழுதியதைத் தவிர, மேற்கொண்டு எந்த அழுத்தத்தையும் அளித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை காபந்து முதல்வராக இருப்பதால் இதற்கு மேல் நடவடிக்கை எடுக்க அவர் தயாராக இல்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை, உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. நோயாளிகளை அழைத்து வர ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பது ஏன்?
மருத்துவமனைகளில் இறந்துபோன நோயாளிகளை மயானங்களில் எரிக்கப் போதிய இடவசதிகள் இல்லை. நூற்றுக்கணக்கான பிணங்கள் ஒரே நேரத்தில் வருகிறபோது, அதனை எரிக்கப் போதிய பணியாளர்கள் இல்லை. இப்படி, அனைத்து நிலைகளிலும் பற்றாக்குறை தாண்டவமாடிக் கொண்டிருப்பதற்கு மத்திய பாஜக அரசுதான் பொறுப்பாகும்.
இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்டு, முதல் அலையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி பெருகியதா?
குறிப்பாக, கடந்த ஆறு மாதங்களாக இரண்டாவது அலை வரும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்கொள்ள எத்தகைய கட்டமைப்பு வசதிகளையும் பிரதமர் மோடி செய்யவில்லை என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன்.
ஏப்ரல் 7ஆம் தேதி பிரதமர் மோடி பேசும்போது, 'கடந்த ஆண்டு கரோனா எதிர்ப்புப் போரில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல, இந்த ஆண்டிலும் வெற்றி பெறுவோம்' என்று கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
முதல் அலையின்போது கரோனாவை எதிர்த்து வெற்றி பெற்றேன் என்று கூறுகிற இவர், இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியாமல், ஆயிரக்கணக்கான மக்களின் பிணக் குவியல்களைப் பார்க்கிறபோது, பிரதமர் மோடி கரோனா எதிர்ப்புப் போரில் படுதோல்வி அடைந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது.
எனவே, வெற்றுப் பேச்சுகளைத் தவிர்த்து கரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையில் செயல்பட வேண்டும். அதேபோல, மத்திய, மாநில அரசுகள் கூட்டாட்சி முறைக்கு வலுசேர்க்கிற வகையில் பணியாற்றி கரோனாவை எதிர்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.