
மேற்கு வங்க மாநிலம் மத்திய கொல்கத்தா பகுதியில் 5 தளங்களைக் கொண்ட தனியார் நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் நேற்று (29.04.2025) இரவு யாரும் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 60), அவரது பேத்தி தியா (வயது 10), பேரன் ரிதன் (வயது 9) உள்ளிட்ட 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நெஞ்சம் கலங்கினேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “கொல்கத்தாவில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று தமிழர்கள் உட்படப் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.