
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வைகைச் செல்வன் பேசுகையில், “ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் (அதிமுக) சங்பரிவரோடு சென்றாலும் தமிழ்ச் சங்கத்தை மறப்பதில்லை” எனப் பேசினார். அதனைத் தொடர்ந்து திருமாவளவன் பேசுகையில், “சங்க பரிவாரங்கள் ஒரு காலத்திலும் சகோதரத்துவத்தை, சமத்துவத்தைப் பேச மாட்டார்கள். எனவே வைகை செல்வன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சங்க பரிவாரங்களோடு சேர்ந்து கொண்டு தமிழ்ச் சங்கத்தை உங்களால் (அதிமுக) ஒரு காலத்திலும் காப்பாற்ற முடியாது.
அது அழித்தொழிக்கிற வரையில் அது ஓயாது. சங்பரிவாரங்கள் அப்படித்தான் இந்தியா முழுவதையும் விழுங்கிக் கொண்டே வருகிறார்கள். தமிழ்நாட்டை விழுங்கத் துடிக்கிறார்கள். முதலில் அதிமுகவை விழுங்கி விடுவார்கள் என்கிற கவலைதான் எனக்கு. சங்பரிவாரங்கள் முதலில் கூட இருப்பவர்களை அரவணைத்துத்தான் அழிப்பார்கள். பகைவர்களை அப்புறம்தான் அழிப்பார்கள். நமக்கு இருக்கிற கவலையே அதுதான். சங்பரிவாரங்களோடு சேர்ந்து ஒரு காலத்திலும் நம்மால் தமிழைக் காப்பாற்ற முடியாது” எனப் பேசினார்.