ஊடகங்களிடம் பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் விதித்த ஜாமீனுக்கான நிபந்தனையை மீறி, ப.சிதம்பரம் மோடி அரசுக்கு எதிராகவும் வழக்குகள் தொடர்பாகவும் பேசி வருகிறார் என்று பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அமித்ஷா தரப்பு இதை கூர்ந்து கவனித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் ப.சி.யின் பேட்டிகளைச் சுட்டிக்காட்டி, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்ய நடவடிக்கை எடுங்கள் என்று, அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், ப.சி.க்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தயாரித்து வருகிறார்கள். அதனால் அவர்கள் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டலாம் என்ற நிலை இருப்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில் தமிழகம் வந்த ப.சி.க்கு காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த வரவேற்பு அவருக்குப் புது தைரியத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். சத்யமூர்த்தி பவனில், வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசிய ப.சிதம்பரம், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்துக்கு இணையாகத் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு பேச, அது சொந்தக் கட்சியினராலே காமெடி மீம்சாக மாற்றப்பட்டு, அதுவும் ஒரு பக்கம் வைரலாக பரவி வருகிறது.