
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக இடைத்தேர்தல் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.
அந்த தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிட உள்ளதாக இ.பி.எஸ் அணி தெரிவித்திருந்ததது. அதே சமயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்களும் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ்-ம் தெரிவித்திருக்கிறார். மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் ஆதரவு கோரி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் பங்கேற்றிருக்கின்றனர். இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தங்களது அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என பாஜகவை கேட்கவுள்ளதாகத் தெரிவித்த நிலையில், தற்போது இ.பி.எஸ் தரப்பினர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜக யாருக்கு ஆதரவு அளிக்கிறது என்றோ அல்லது பாஜகவே இடைத்தேர்தலில் போட்டியிடுகிறதா என்றோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.