பத்து சதவிகிதம் வாக்குகளைக்கூட வைத்திருக்காத டி.டி.வி. தினகரனால் எப்படி வெற்றி பெற முடியும், அவர்கள் அணி அட்டக்கத்தி போன்றது என்று மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வாக்கு வேட்டையின்போது குறிப்பிட்டார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் செ,ராமலிங்கத்தை ஆதரித்து சீர்காழி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்து அவர் பேசுகையில், "பிரமதர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள், குறிப்பாக நடுநிலை, கடைநிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதுவரை இல்லாத ஊழல் ஆட்சி நடந்துவருகிறது. அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் வருமானம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், முதல்வரும், அமைச்சர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும் என சுமார் 150 பேர் மட்டுமே இன்று வசதிபடைத்தவர்களாக இருக்கின்றனர்.
சீர்காழி பகுதியில் தடுப்பணை கட்டுவது, கொள்ளிடத்தில் தடுப்பனைக்கட்டுவது, உள்ளிட்ட இதுவரை அறிவித்த திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை. கருத்துக்கணிப்புகளில் கூறியப்படி 10 சதவீத வாக்குகளைக்கூட வைத்திருக்காத டி.டி.வி. தினகரனால் தமிழகத்தில் 22 சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது" என்றார்.