அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர்மட்ட குழு நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன். தங்கமணி உள்ளிட்ட நிர்வாககிள் பேசினர். உடனடியாக அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போதைய நிலையில் அந்த குழுவை அமைக்க முடியாது என்று பேசினார். இதேபோல் தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார்கள்.
ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இதேநிலை இருக்கிறது. இந்த நிலையில் அடிக்கடி தலைமை அலுவலகம் வந்து நிர்வாகிகள்-தொண்டர்களை சந்திக்க போகிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
எனவே அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளையும் அழைத்து பேசுங்கள். ஏனென்றால் பலர் குமுறலுடன் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசவேண்டும். கட்சியில் சூழ்ச்சியும், தந்திரமும் தெரியாத ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் எக்காரணம் கொண்டும் வருத்தப்பட வைக்காதீர்கள். அவருக்கு சந்தோஷம் தரும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடுங்கள் என்றார்.