
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை, வாக்கு சேகரிப்பு, கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் என தேர்தல் களம் வேட்பாளர்களின் பேச்சுக்களால் அனல் பறந்து கொண்டிருக்கின்றது.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் தொகுதியில், மோகனூர் எனும் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் தங்கமணி, அதிமுக எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அத்தொகுதி வேட்பாளரான பாஸ்கர், “மனசாட்சினு ஒன்னு இருந்தா இலைக்கு ஓட்டு போடுங்க, நீங்க இரட்டை இலைக்கு ஓட்டு போடலனா, கண்டிப்பா நல்ல சாவு சாக மாட்டீங்க..” என்றார். அவரின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.