அரசியலுக்கு வருவதை பல்வேறு தருணங்களில் உறுதிப்படுத்திக்கொண்டே வந்த ரஜினிகாந்திடம், சமீபத்தில் அவரிடம் தவறான சில கருத்துக்களை சிலர் சொல்லியுள்ளனர்.
குறிப்பாக, "அரசியலுக்கு வாருங்கள்; ஆனால், நீங்கள் முதலமைச்சராக இருக்க வேண்டாம்; கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ஆட்சியை நடத்தினால் மக்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கும். தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள்" என்கிற ரீதியில் கூறியுள்ளனர்.
இந்த கருத்து, ரஜினிக்கு பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான், கடந்த வாரம் மன்ற நிர்வாகிகளை அழைத்து விவாதித்தார். அந்த ஆலோசனைக்கு பிறகு, 'ரஜினி முதலமைச்சராக இருக்க மாட்டார், தலைவராக மட்டுமே இருப்பார்' என்ற தகவல் மெல்ல மெல்ல கசிய தொடங்கியது. இந்த செய்தி மன்றத்தில் உள்ளவர்களுக்கும், அவரது நலன் விரும்பிகளுக்கும், அரசியலுக்கு அவர் வர வேண்டும் என கருதும் அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினியின் இத்தகைய குழப்பமான முடிவு கடந்த நான்கு, ஐந்து நாட்களாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில், ரஜினியை சந்தித்தவர்களும், அவரை தொடர்பு கொண்டு பேசிய பிரபலங்களும் "தமிழகத்தில் அரசியல் மாற்றம் கொண்டுவர உங்களால்தான் முடியும். ஒரு மாற்று அரசியலை முன்வைத்து யாரேனும் வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அரசியல் வெற்றிடத்தை உங்களால் தான் நிரப்ப முடியும் என்கிற கருத்தும் தமிழக அரசியலில் இருக்கிறது.
இந்த சூழலில், 'முதல்வர் வேட்பாளர் நான் இல்லை' என்று நீங்கள் அறிவிக்கப்போவதாக வரும் செய்திகள் உங்களுடைய அரசியல் பிரவேசத்திற்கு வெற்றியை தராது. ஏனெனில், ரஜினி என்கிற ஒரு ஹீரோவையும், ரஜினி என்கிற பிம்பத்தையும்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 'ரஜினி முதல்வர்' என்று சொன்னால்தான் ஓட்டுகள் விழும். நீங்கள் முதல்வர் இல்லாமல் வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக சுட்டிக்காட்டினால் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். நீங்கள்எதிர்பார்க்கிற அரசியலும் நிறைவேறாது.
அதனால் இந்த மாதிரியான எதிர்மறை கருத்துக்களை புறம்தள்ளுங்கள். 'அரசியல் கட்சியை துவங்குகிறேன்; முதல்வர் வேட்பாளர் நான்தான்; ஏற்கனவே நான் சொன்னதுபோல எம்ஜிஆர் மாதிரி ஒரு நல்ல ஆட்சியை தருவேன்' என்கிற விதத்தில் நீங்கள் கருத்துக்களை தமிழக மக்களுக்கு வெளிப்படுத்துவது தான் உங்கள் அரசியல் நுழைவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தரும்" என யாதார்த்த அரசியலை விவரித்திருக்கிறார்கள்.
இதனை ரஜினி உள்வாங்கிக்கொண்ட நிலையில் தான் முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பை நாளைக்கு நடத்துகிறார். அவருடைய நலன் விரும்பிகள் விவரித்தது போல பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுவாரா? அல்லது தன் மனதில் தீர்மானித்திருப்பது போல, நான் முதல்வர் வேட்பாளர் இல்லை' என சொல்வாரா? என்கிற எதிர்பார்ப்பில் தவித்தப்படி இருக்கிறார்கள் அவரது ரசிகர் மன்றத்தினர். இதனால், நாளை (12/03/2020) காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் கூட்டியுள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.