2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (06.01.2025) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘யார் அந்த சார்?’ என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். அதோடு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் இருந்து குண்டுக்கட்டாக அவையில் வெளியேற்றப்பட்டனர். அதே சமயம் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா” எனக் குறிப்பிட்டுள்ளார்.