ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்கள் முன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு மக்களை திமுகவினர் வரவிடாமல் செய்துவிட்டனர்” எனக் கூறி தனது செல்போனில் இருந்த ஆதாரங்களையும் காட்டினார்.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக எதிராக செயல்படுகிறது என்றும், ஒவ்வொரு வார்டுகளிலும் வாக்காளர்களை ஒரு குடோன்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை எனவும் மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறையில் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் சட்டத்துக்கு புறம்பாகவே திமுகவினர் செயல்படுவதாகவும், மாநில அமைச்சர்கள் திமுகவின் எம்எல்ஏக்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கக் கூடாது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 13 ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னியிடம் புகார் மனுவை கொடுத்தனர்.