நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைத்தார். அதே போன்று மாநிலங்களில் ஆளுநர்களும், யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்களும் கொடி ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று 74வது குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கடற்கரைச் சாலையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரியாக காலை 9.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1 மணி நேரம் தாமதமாக வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் தமிழிசை வருகைக்காக காத்திருந்தனர்.
தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைத்துவிட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்து தேசியக் கொடி ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது. விழா நடைபெற்ற கடற்கரைச் சாலை காவல்துறை, கடலோரக் காவல்துறை, இந்திய கடலோர காவல் படையினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “தெலுங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு சரியாக 8.06 மணிக்கு விமானத்தில் ஏறிவிட்டேன். 9.06க்கு இங்கே வந்து சேர்ந்திருக்க வேண்டியது. இங்கிருந்து விமான அனுமதி கிடைக்கவில்லை (flight clearance). அதனால் 8.45 மணிக்கு தான் விமானம் கிளம்பியது. இங்கு வந்தும் மூன்று நான்கு முறை வானத்தில் சுத்தினோம். இறங்க முடியவில்லை. இங்கும் சரியாக அனுமதி கிடைக்கவில்லை. அதனால்தான் நான் தாமதம். இல்லையென்றால் இங்கு 9.05 மணிக்கு தரையிறங்கி 9.30 மணிக்கு அங்கு வந்திருப்பேன். தாமதத்திற்கு நான் காரணம் இல்லை என்றாலும் கூட என்னை மன்னிக்க வேண்டுகிறேன். புதுச்சேரி அரசை மிகவும் பாராட்டுகிறேன். மிக நேர்த்தியான அலங்கார ஊர்திகளை செய்திருந்தார்கள்” எனக் கூறினார்.