Skip to main content

“இராணுவ வீரர்களின் தியாகத்தை சந்தேகிக்கும் ராகுல்” - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Rahul doubts the sacrifice of army men

 

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்டமான 370 நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாகக் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு லடாக் மக்களைச் சந்தித்து உரையாடிய ராகுல் காந்தி லேவில் உள்ள குஷோக்கு பகுலா புட்சல் மைதானத்தில் 2023 ராஜுவ் காந்தி புட்சல் போட்டியின் இறுதிப் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். பின்னர் வெற்றி பெற்ற அணிக்குக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினார்.

 

முதலில் இரண்டு நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம் தற்போது ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. அதேபோல் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாள்  நேற்று 20ஆம் தேதி கொண்டாடப்படப்பட்டது. அந்த வகையில், பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி,  “இந்தியாவின் ஒரு இஞ்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால்,அதில் உண்மையில்லை. தங்களின் மேய்ச்சல் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக லடாக் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், லடாக் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “லடாக் குறித்து ராகுல் காந்தி கூறியது முற்றிலும் தவறானது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்திய ராணுவ வீரர்கள் வீரத்துடன் சண்டையிட்டதால் தான் சீனா ராணுவ படை அங்கிருந்து சென்றனர். இதனால், ராணுவ படையின் வீர தியாகத்தின் மீது ராகுல் காந்தி சந்தேகம் எழுப்புகிறார். லடாக் சென்று இந்தியாவை அவமானப்படுத்துகிறார். ராகுல் காந்தி எல்லைப் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒன்றைச் சொல்லி இந்தியாவுக்கு எதிராக சீனாவுக்காக பிரச்சாரம் செய்கிறார். பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவின் மன உறுதியை பலவீனப்படுத்த வேண்டாம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்