தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.01.2025) சென்னை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். அப்போது அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் மாணவ, மாணவியர்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார். அதோடு 1000 நபர்களுக்குப் புத்தாடைகள், பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, குடை, பிளாஸ்க், டிபன் பாக்ஸ் மற்றும் காலண்டர் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. எனவே தான் பொங்கல் பண்டிகையை மேலும் இந்த ஆண்டு பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவித்தோம். பொங்கல்தான் தமிழர்களுக்கான பண்டிகை என்று தந்தை பெரியார் கூறினார். பொங்கல் பரிசாகத் திருக்குறளைத் தருகிறேன் எனக்கூறியவர் அவர். தமிழுக்காகவும், தமிழ்ச் சமூகத்திற்காகவும் கடைசிவரை பாடுபட்டவர் தந்தை பெரியார். பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்தவர். பெரியார் குறித்து அவதூறாக பேசுவோர் பற்றிப் பேசி, அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.
மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை ஒப்புக்கொள்கிறேன். அந்த வகையில் நிறைவேற்றாத 1, 2 வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வீராசாமி, ஆர். கிரிராஜன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன் மற்றும் ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.