சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாகவே இருக்கிறது இந்தியா. அப்படி பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் ஒவ்வொன்றுக்கும் முன்வைக்கப்படும் காரணங்கள், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பிற்போக்குத் தனங்களை வெட்டவெளிச்சமாக்குகின்றன.
அந்த வகையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் நிறத்தைக் காரணம்காட்டி இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரக்பூர் அருகிலுள்ள சக்மரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரபானி. இவர் பயங்கர தீக்காயங்களுடன் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது கணவர் சவுரப் மற்றும் மாமியார் சுமித்ரா ஆகியோர் இந்தக் கொலை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஷ்ரபானியின் குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரில், அதிகளவிலான வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவைத்தோம். இரண்டு வருடங்களாக நிறத்தைக் காரணம்காட்டியும், கூடுதல் வரதட்சணை கேட்டும் ஷ்ரபானி கொடுமைக்கு ஆளாகினார். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஷ்ரபானிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையும் காரணமாக வைத்து தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது எரித்து கொன்றுவிட்டார்கள் என தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.