இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர்.
அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ), பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை வீரர்கள் நடத்தினார்கள்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பிரிஜ்பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக வாக்குமூலம் அளிக்க உள்ள வீராங்கனைகளுக்கு டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதே சமயம் தற்போது நடந்து முடிந்துள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விட்டு நாடு திரும்பிய வினேஷ் போகத் மல்யுத்த சங்கத்துக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் எனக் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க உள்ள வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை டெல்லி போலீசார் வாபஸ் பெற்றுள்ளனர் வினேஷ் போகத் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரிஜ் பூஷனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவிருந்த மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பை டெல்லி போலீசார் வாபஸ் பெற்றுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.