17- வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. அதில் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இவர்களுக்கு தற்காலிக மக்களவை சபாநாயகர் டாக்டர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் மக்களவைக்கு சபாநாயகர் வேட்பாளராக பாஜக சார்பில் மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவின் பெயரை நேற்று அறிவித்தது. பாஜகவின் மக்களவை சபாநாயகர் வேட்பாளருக்கு காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று மக்களவை கூட்டத்தில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பெயரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன் மொழிந்தார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித்தலைவர்கள் வழிமொழிந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர். பாலு சபாநாயகராக ஓம் பிர்லாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவையில் அறிவித்தார். மேலும் சபாநாயகருக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்து வாழ்த்து கூறினார். பின்பு சபாநாயகர் ஓம் பிர்லாவை பற்றி பேசிய பிரதமர் ராஜஸ்தான் மக்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கக்கூடியவர். அம்மாநில மக்களுக்காக அயராது உழைத்தவர் ஓம் பிர்லா என்று குறிப்பிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் பாஜக கட்சியின் சபாநாயகரை ஆதரித்து பேசி வருகின்றனர்.