உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவருகிறது. அதேபோல், மம்தா பானர்ஜியின் அதிரடி நடவடிக்கைகளால் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமையும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றின் விவாதத்தில் கலந்துகொண்ட ஒவைசி, ராகுல் காந்தியை தனக்குத் தெரியாது என கூறியுள்ளதோடு, காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒவைசி கூறியதாவது, “மம்தா பானர்ஜி மற்ற மாநிலங்களில் தொடர்ந்து போராட வேண்டும். காங்கிரஸ் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் நொறுங்கிவிடும். யார் ராகுல் காந்தி? எனக்கு அவரைத் தெரியாது. அவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு கட்சிக்கும் நாங்கள் பி-டீம் என சொல்லப்படுகிறோம். ராகுல் காந்தியை இங்கு அழைத்தால், பாஜக பேசும் அதே மொழியைப் பேசுவார். அகிலேஷ் யாதவும் அப்படியே பேசுவார்.
இப்போது மம்தா பானர்ஜி பி-டீமாக ஆக்கப்பட்டுள்ளார். பி-டீம் என்பது என்னைக் குறிக்கும் சொல். இப்போது அவர்களைப் (திரிணாமூல் காங்கிரஸ்) பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் கூறுகிறது. கோவாவில் அவர்கள் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.” இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.